உனையன்றி வேறொரு தெய்வமுண்டோ?

உளதெனும் மற்றெதையும் நான் வணங்குவனோ!



இவ்வழகுத் திருமேனி ஈடாகுமோ

இதழ் புன்னகைப் பாங்கும் இணையாகுமோ!



முகத் தாமரை வேறெங்கும் மலர்ந்திடுமோ

முழங்கா லழகும் ஈடாய் இருந்திடுமோ!



மணிவயிறும் காணக் கிடைத்திடுமோ

மறைத் தந்திடும் ஞானமும் படைத்துடுமோ!



பித்தாகி என்னை இழுத்திடுமோ

பிள்ளைப் போலவே கொஞ்சி விளையாடிடுமோ!



கோலேந்தும் வீரமும் இருந்திடுமோ

கோபாலனின் நாமம் போல் இனித்திடுமோ!



மன்னையைப் போலெங்கும் அமைந்திடுமோ

மலர் மார்பினில் கருணையும் வளர்ந்திடுமோ!



உணர்வினால் உள்ளத்தில் பேசிடுமோ

உயர்குல மேதும் காணாது பழகிடுமோ!



கள்ளத் தனமது இருந்திடுமோ

கரை சேர்க்கும் மனமது வந்திடுமோ!



தவழ்ந்திடும் வயது இருந்திடுமோ

தமி  ழிசையில் மயங்கிக் கிடந்திடுமோ!



கோபாலனுக் கிணையொன் றிருக்குமாயின்

கோபால பிரிய னுயிர் பிரியட்டுமே!
                                - ஹரிசரண்

Comments

Popular posts from this blog