வெண்மதி மேலிருந்து கீழ்வர லாயிற்று
வெந்தையிர் கடையும் ஓசையும் நின்றது
வெம்மை தீர்ந்து குளிருமிங் காட்கொண்டது
வெண்ணை உண்ட வாயனே தாலேலோ!
வெண்சங்கு உடையோனே தாலேலோ!

முனிகட்கு சேவை அருளிய தயாபாரா!
முப்பது முக்கோடி தேவருமே உனக்கு
முத்தோடு பொன்சேர்த்து தொட்டில் அளித்தனரே
முகுந்தன் எனும் நாமமுடையா தாலேலோ!
முழு முதற் பொருளே தாலேலோ!

பாலும் சோறும் உண்டு களித்தாய்
பாரில் லீலையும் செய்து மகிழ்ந்தாய்
பாம்பின் மீதே ஆடி அயர்ந்தாய்
பாலனே கண்வளர் தாலேலோ!
பாவங்கள் துடைப் போனே தாலேலோ!

கோபியர் கூறிய குறை யினாலே
கோபாத்தால் உரலோடு கட்டி விட்டேன்
கோபமாய் இராதே அன்னை மீது
கோபாலா உறங்குவாய் தாலேலோ!
கோபியர் சூழ்மன்னா தாலேலோ!

மாடுகள் மேய்த்துநீ சோர்ந் திருப்பாய்
மாமலை உயர்த்திநீ களைத் திருப்பாய்
மாயங்கள் செய்துநீ அயர்ந் திருப்பாய்
மாலே உறங்குவாய் தாலேலோ!
மாசற்ற தூயமுதே தாலேலோ!

குறும்புகள் செய்து நீ முடித்திருப்பாய்
குறைகள் நாளையே  செவிக ளெட்டும்
குணமாய் செப்புவோர் சொல் கேட்டு
குலமணியே கண்ணுறங்கு தாலேலோ!
குழவியே கண்வளர் தாலேலோ!

கோலங்கள் பலகாட்டி அயர்ந் திருபாய்
கோவினமும் சற்றே உறங்க லானது
கோபால பிரியனும் வந்து பாடுகின்றேன்
கோபாலா துயில்கொள்ளேன் தாலேலோ!
கோலேந்திய குழந்தையே தாலேலோ!
                                         - ஹரிசரண்

Comments

Popular posts from this blog