இராஜகோபாலஸ்வாமி ஆரத்தி (வடநாட்டு பாணியில்)

ஆரத்தி இராஜ இராஜா!
திருமன்னையின் மன்னா!
திருமாமகள் ப்ரியனே
திருமாலே! தாயாளா!
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி மணிவண்ணா!
மனம் பறித்திடும் கண்ணா!
மந்தங்கள் தெளிவிப்பாய்
மலர் மார்பனே , வாராய்
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி செம்பகேசா!
செண்பகாரண்ய நாதா!
செங்கழல் பணிந்தோமே
செங்கதிர் முகத்தோனே!
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி வாசுதேவா!
வாழ்வின் பொருளும் நீயே!
வானவர் போற்று மமுதே
வாமன மூர்த்தி (ஸ்ரீ )
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி ஆயர்கொழுந்தே!
ஆண்டிடும் ஐயனே
ஆணவம் தீர்த்தருள்வாய்
ஆயர் குலத்தின் அழகே
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி இடைமகனே!
இன்னல் தீர்த்திடும் இறைவா!
இசைத்தமிழ் கேட்டிடுவாய்
இணையொன்றுனக்கு உண்டோ?
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி நந்தலாலா!
நலம் அளித்திடும் ஒளியே
நனிவாய் நகைத்தருள்வாய்
நடமிடும் நாரணா!
ஆரத்தி ஏற்றருள்வாய்...

ஆரத்தி கோபாலா!
கோலேந்திய பாலா!
கோயில் வந்தணைந்தோம்
கோபாலபிரிய நாதா!
ஆரத்தி ஏற்றருள்வாய்...
                          - ஹரிசரண்



Comments

Popular posts from this blog