அடியேன் எழுதி பாடிய ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி நீராட்டம் , ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று இராஜகோபாலனுக்காக எழுதி சமர்ப்பிக்கபட்டது. பிழையிருப்பின் பொருத்தருள்க.
1)வெண்ணை பற்றுகள் முகமெல்லாம் படிந்ததோடன்றி
மண்ணை யுமாங்கே விழுங்கிநீ காண்பித்தாய்
கண்ணை பறிக்கும் கார்முக மண்டலமது
விண்ணை யொத்தொளிர கோபாலா நீராடவாராய்
2)ஆடி யிலுதித்த கேட்டை நன்னாளில்
நாடி நான்வந்துன்னை நீராட்டும் பொழுதில்
ஓடி நீசென்றால் நான்இனிஎன் செய்வேன்
வாடி டுமுகத்தை கண்டுகோபாலா நீராடவாராய்
3)முனி வரின்தவப்பயனாய் மன்னைக்கு வந்தநீ
தணி குரல்கேட்டும் வாராயோ கல்மனமோ
பணி யென்னவேறெனக்கு நீநீராட வேண்டும்
கனி யுனக்குநான் தருவேன்கோபாலா நீவாராய்
4)துகி லோடு புனுகும் கொண்டுன்னை
அகி லம்போற்றநான் நீராட்ட வேண்டும்
மகி முப்பூஅன்ன திருமேனியை நீராட்ட
முகி லுமாங்கே அழைப்பதுகண்டு நீவாராய்
5)புன்னை மீதேறி நீசெய்த சேட்டைகள் நானறிவேன்
மன்னை யிலும் அதைநீ மறக்காமல் செய்வித்தாயோ
தன்னை மறந்துன்னை கோபியர் அழைக்கு முன்னே
என்னை மகிழ்த்த கோபாலா நீராட வாராய்
6)வாயில் அண்டம் காண்பித்த மணிவண்ணா
காயில் சீகையோடு நானிங்கே காத்திருக்க
தாயின் துன்பத்தை நீஎங்கே கண்டுகொண்டாய்
நாயினும் நானலைந்தேன் ஓடாமல் நீராடவாராய்
7)உருவில் எழிலோடு பிறந்த உன்னை
கருவில் நான்சுமக்க வில்லை யேனும்
பருகவே முலைப்பால் நான் தருவேன்
அருகிலே அமர்ந்து கோபாலா நீராடவாராய்
8)கோபிகைக் குழாமே உனைக் காணாது
கோபித்துப் பித்தாய் செல்வதைக் காண்
நாபியி லரும்பிய மலரிலுன் மகனோடு
கோபிகைக் கோவே சொல்கேட்டு நீராடவாராய்
9)நகையில் மயக்கும் கார்வண்ண மாயனே
சிகையில் சிக்குகள் பலசேர்ந்து விட்டனகாண்
வகையில் பலஉண்ண நான்தருவேன் கோபாலா
பகையில் லாமல் என்னோடு நீராடவாராய்
10)உனை அழைத்தே களைப்புற்றேன் கோபாலா
எனை நீசிறிதேனும் கண்டுகொள் மாமாயா
பனை வெல்லத்திற் செய்த பண்டங்கள் நான்தருவேன்
வினை யொன்றுமறியேன் வேறுநீ நீராட வாராய்

Comments
Post a Comment